Monday, January 7, 2013

பிறந்த நாள் பரிசு


நான் உதித்த இந்நாளில்
எனக்காய் பிறந்த,
பரிசு கேட்டாய்!

உதட்டின் ஈரம் துடைத்து,
ஒய்யாரமாய் ஒரு முத்தமிட்டேன்.
ஆசையாய் கிடைத்த பரிசு என்றாலும்,
அரிதான பரிசொன்று
வேண்டுமென கேட்டாய்!

அன்றே பூத்த மலரொன்றை
பறித்து - ஏன் அன்பு காதலியே
உனக்கான மலர் என்றேன்.

எழிலாய் மலர்ந்த மலரென்றாலும்
எனக்காய் பூத்த மலரில்லை என்றாய்!

உனக்காய் ஒரு சேலை நெய்து,
உறவாடி அணைத்தேன்.
அன்பின் சுகந்தமுண்டு,
ஆனால் ஆடையொன்றும்
அதிசயமில்லை!

அக்கணத்தில் தூறிய மழைத் துளியை
சேகரித்து,
அன்பின் மழையாய் பொழிந்திட்டேன்.
தேகம் குளிர நீராடி
தேவன் தந்த பரிசு இது,
உனது எங்கே என்றாய்?

முயன்று தோற்ற செய்தி எல்லாம்,
முகம் சிணுங்கி எழுத்திலிட்டேன்.
எனக்காய் பிறந்த கவிதையடா இது!
இதுவல்லவோ எனக்கான பரிசு என்றாய்............

Tuesday, September 6, 2011

ஞாயிறே உன்னை நாடி.....

நித்தம் ஞாயிறு உதயம் கண்டு,
கனவுப்படச்சுருளை கட்டி வைத்து,
நிகழ்வுச் சாலைக்குள் தொடர்கின்ற பயணம்.

அங்கம் துலக்கி,
அதிகாலை பணி முடித்து,
அரைகுறையாய் அன்னமுண்டு,
அடுத்த பொழுதிற்கும் கையில் கொண்டு,
ஏக துடிப்புடன் எட்டுவோம் பேருந்து நிலையத்தை.

அங்கு குதிரையாய் வேகமெடுத்து ,
வவ்வாலாய் பேருந்தில் தொற்றி,
ஆமை வேகத்தில் அலுவலகம் சென்றால்
அடடா...
நான்கு நிமிடம் நேரத்தாமதம் !!!!!!!!

இனி ...
மேலதிகாரி
நாவிட்ட சொற்கள் கேட்டு,
நயமாய் மன்னிப்பும் கேட்டு,
அன்றைய பணி முடித்து
இல்லம் சேர
காலைக்கண்ட அவஸ்தைகள்
மண்ணளவும் மாறாது
மாலையும் கண்டு....
சோர்ந்த தேகத்துடன்
இல்லறப் பயணம்...

இந்த சுகமற்ற வாழ்க்கைக்கு
இன்றொரு நாள் சுதந்திரம்!
இன்று ஞாயிறு, ஆதலால்
ஞாயிறு உதயம் காண கட்டாயமில்லை !!!!!!

என்னவள்

அன்பென்ற சொல்லுக்கு அன்னையைதவிர நிகரில்லை
ஆனாலும்
அன்னைக்கு நிகராக அன்புக்கு அவளுண்டு

அழகின் அகராதி அவளென்று சொல்லமாட்டேன்
என்செய்ய
என் அகராதியில் அவளின்றி அழகுக்கு சொல்லில்லை

என்னை புரிந்துகொண்டவருள் எனக்கு இணை யாருமில்லை
இருப்பினும்
இணையான என்னவளோ என்னைபடித்து எனை வென்றாள்

சோதனையும் வேதனையும் சுமப்பவனுக்கே தெரியுமென்பார்
அட
தெரியாத சுமைகளுக்கும் தோள்கொடுத்து வலிகுறைப்பாள்

வாய்சண்டை தீரர் கண்டால் வழிமாறி வருவேன் என்பாள்
அய்யோ
தன்வாய்மூட மறுத்துவிட்டு என் செவிமூட வழிசெய்வாள்

உதட்டு வேகத்தில் உன்னைப்போல் யாரடா என்பாள்
கொஞ்சம்
உஷ்ணம் குறைந்தபின்னும் உன்னைப்போல் யாரடா என்பாள்
முன்னது ஊடல், பின்னது கூடல் ..

என்னவள்போல் யாருமில்லை என்று சொல்ல இயலாது
நிச்சயமாய்
எனக்கான என்னவள்போல் யாரும் இருக்க முடியாது .......

வாடகைப்பூக்கள்

இல்லறதேனினை ருசித்து சலித்த சதை மூர்கசலனவண்டு
பகுதி நேரமாய் ருசித்துபோகும் - இவை வாடகைப்பூக்கள்

பலர்கைபட்டு பழகிப்போன இதற்கு இதழ்கள்
வாடும்வரை மௌசு உண்டு அதுவரை -இவை வாடகைப்பூக்கள்

மணம் மங்கிய பூ, என்றாலும் மனை மறந்து மொய்க்கும்
நாற்றமுற்ற வண்டுகள் நாட்டில் உள்ளவரை -இவை வாடகைப்பூக்கள்

கொஞ்சிகுலவி, நெஞ்சைதுலவி கலவியால் பிணி நஞ்சை பிசைந்தூட்டி
பையப் பைய பரலோக வழிகாட்டும் - இவை வாடகைப்பூக்கள்

சாதி, சமயம், சமூகம், மதம் மற்ற ஏதும் காணா சமத்துவ பிணியை
மேனி உரசவந்த மாக்களுக்கு வஞ்சனையின்றி அள்ளித்தரும் -இவை வாடகைப்பூக்கள்

இவை இரவுபூக்களல்ல இருட்டுபூக்கள், எச்சரிக்கை
சொந்தபூவை தரிசிக்கும்வரை கொஞ்சம் பொறுத்திறு இளவண்டே!
வடகைப்பூவை காணாவரை உன் வாழ்நாளெல்லாம் நறுமணபூச்சரமே...

Friday, September 2, 2011

நஞ்சுடையான்

இடுக்கண் வருங்கால் நகுக - பழமொழி
இடுக்கண் வழங்கி நகுக - சிலரது புதுவழி
நடைபோடும் நாட்கள், எடைபோட்டு சொல்லும்
ஈன பிறவிகள் ஏளன புன்னகையில்
இழைந்தோடும் நஞ்சதனை ...
விஷம் முறிக்க வைத்தியத்தில் வழியுண்டு
இவர் நகை உணர்த்த காலத்தின் மறுமொழியுண்டு..
விரைந்தோடும் காலம் விடை சொல்லும் காத்திருப்போம் ......

கறிக்கோழிகள்


ஜனனத்தின் முடிவு மரணம்
உலக நியதி!
மரணதிர்க்காகவே ஒரு ஜனனம்
மனிதனின் சதி???? ....

நினைவுகள் நீங்குவதில்லை .......

காலத்தின் ஓட்டத்தில்,
வடிவங்களில் சில மாற்றம்,
வாழ்க்கையில் சில மாற்றம்.
நிறங்கள் கூட மாறினாலும்
நினைவுகள் மட்டும் ??????
சுகம் தந்த நினைவுகளை சுற்றங்கள் நினைவூட்டும்,
வடுக்கள் தந்த வலி மட்டும்,
தனிமையின் ராஜீயம் தேடும் .
எத்தனை நாட்களை தின்று முடித்தாலும்
அளவுகள் சற்றே குறைகிறது,
ஆனால் முற்றும் அகல மறுக்கிறது.
நினைவுகள் நீங்குவதில்லை .......